Home 2018 அக்டோபர் 2018 என் உணவு என் உரிமை
வியாழன், 26 மே 2022
என் உணவு என் உரிமை
Print E-mail

விளம்பர அல்ல… வாழ்க்கை!

சரவணா இராஜேந்திரன்

குழந்தைப் பருவத்தில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுகிறோமோ அது நமது எதிர்கால வாழ்க்கையை ஆரோக்கியமாக வைக்க மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

துபாயில்  புர்ஜ் கலிபா என்ற  உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தைப் பார்த்திருப்பீர்கள். உலகின் மிக உயர்ந்த கட்டிடம் ஆயினும், அதைத் தாங்கி நிற்பது அதன் அடித்தளத்தின் உறுதிதான். அது போல் தான் நாம் சிறுவயதில் உண்ணும் உணவும், நாம் எதிர்காலத்தில் மிகவும் அறிவுள்ளவர்களாக, உடல் ஆரோக்கியமிக்கவர்களாகத் திகழ உதவும்.

பழங்கள், காய்கறிகள்

அண்மையில் தாவரவியல் தொடர்பான ஓர் ஆய்வில் தாய்விதையிலிருந்து ஒரு மரம் வளர்ந்த பின் அந்த மரத்தின் விதையில் எந்த விதையிலிருந்து வந்ததோ அந்த விதையின் சத்து மூலக்கூறுகள் மிகவும் சிறிதளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எடுத்துக்காட்டாக ஒரு மாம்பழத்தை எடுத்து அதன் விதையை நாம் மண்ணில் ஊன்றி வைத்தோமென்றால், அந்த மாமரம் பெரிதான பிறகு அதில் வரும் பழங்களில் நீங்கள் ஊன்றிய மாங்கொட்டையின் சத்துக்கள் மிகவும் குறைந்த அளவு இருக்கும். இது எதற்கு என்றால் விதை முளைக்க, நன்றாக வளரத் தேவையான சத்து எது என்று தெரிந்துகொண்டு அதை விதையிலும் பழத்திலும் சேகரிக்க இயற்கையில் நடக்கும் முன்னேற்பாடான செயல் இது.

முட்டை

தாவரங்கள், எங்கும் நகரமுடியாது. ஆகவே அது விதையின் மூலம் தன்னுடைய எதிர்காலத்திற்கான மிக முக்கியமான ஊட்டச்சத்துகளை உள்ளடக்கிக் கொள்கிறது, அதனால் தான் பழம் சாப்பிடும் நமக்கு பல்வேறு வகையில் ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கின்றன. இதே போல்தான் முட்டையும்! முட்டையில் வெள்ளைக்கரு என்பது ஊட்டச்சத்தின் வங்கி என்று கூட நாம் கூறலாம். அவ்வளவு ஊட்டச்சத்துக்கள் அதில் இருக்கின்றன. ஆகவே தினமும் முட்டைச் சாப்பிடுவதை ஒரு பழக்கமாகக் கொள்ளவேண்டும்.

இப்போது இறைச்சிக்கு வருவோம்

இறைச்சி உண்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். என்புருக்கி(டிபி) எலும்பு வலுவிழத்தல், பற்கள் உடைதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளைக்கு எலும்புகளை காய்ச்சி அதில் சாறெடுத்துக் குடிப்பது பன்னெடுங்காலமாக எளியமக்களுக்கு இருக்கும் மிகவும் எளிமையான தீர்வு ஆகும்.  இன்று இதை சூப் என்று கூறுகிறோம். குழந்தை முதல் பெரியவர்கள் வரை எலும்பு தொடர்பான நோய்களுக்கு மருத்துவர்-களிடம் சென்றால் கால்சியம் மாத்திரைகள் தருவார்கள்.

அது செயற்கையாக ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட கால்சியம் ஆகும். இந்த கால்சியம் அதிகம் தண்ணீர் குடிக்கும் பட்சத்தில் எலும்புகளில் இருந்து தண்ணீரோடு கரைந்து வெளியேறிவிடும். வெய்யில் காலம் முடிந்த பிறகு பெரும்-பாலானவர்களுக்கு மூட்டுவலி, கால்வலி, கைகால் உளைச்சல் போன்றவை வருவதைப் பார்க்கலாம். கோடைக்காலங்களில் அதிகம் தண்ணீர் குடிப்பதால் கால்சியம் இழப்பு ஏற்பட்டு இந்த வலிகள் ஏற்படுகின்றன.

கோடைக் காலங்களில் சிறுநீர் பரிசோதனை செய்யும்பொழுது அதில் அதிக கால்சியம் இருப்பதைக் காணலாம். இவற்றை ஈடு செய்ய மீண்டும் மாத்திரைகள் கொடுப்பார்கள். விலங்குகளின் எலும்புச் சாற்றின் மூலம் இயற்கையான கால்சியத்தைப் பெறமுடியும். இந்தக் கால்சியம் இயற்கை வழியில் கிடைப்பதால் உடலில் உள்ள நீரில் கரைந்து போகாமல் எலும்பு-களுடனேயே இருந்து எலும்புகளுக்கு உறுதித்தன்மையத் தருகிறது. எதற்காக கால்சியம் குறித்துக் கூறுகிறோம் என்றால், எலும்புகள் அது முதுகெலும்பானாலும் சரி, கால் எலும்பு, கை எலும்பு முக்கியமாக மண்டை ஓடு போன்றவற்றின் உறுதித்தன்மை மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகும்.

இறைச்சிக்கு வருவோம், இறைச்சி சாப்பிடக் கூடாது, இறைச்சி சாப்பிடுவது அறுவருப்பானது, சைவம் தான் சிறந்தது என்று வதந்திகள் பரவிவருகின்றன, அப்படி அல்ல. இறைச்சி சாப்பிடுவது அதுவும் இளமைப் பருவத்தில் இறைச்சி சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும், பள்ளி செல்லும் பருவத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இறைச்சி உணவு சாப்பிடவேண்டும். 17 முதல் 40 வயது வரை வாரத்திற்கு மூன்று நாட்கள் இறைச்சி சாப்பிடவேண்டும். விலை உயர்ந்த உலர்பழம், கொட்டைகள்(பாதாம் பருப்பு, பிஸ்தா), பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் போன்றவற்றில் கிடைக்கும் புரதங்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இறைச்சியில் அதிகம் உள்ளன.

இறைச்சியில் உள்ள புரதம், மூளையின் கட்டளைகளைக் கொண்டு செல்லும் நரம்புகளுக்கு உறுதியைத் தருவதுடன், செல்கள் இழப்பை ஈடு செய்து புதிய செல்களை உருவாக்குவதிலும் மிகவும் அவசியமான பணியைச் செய்கிறது.

இதை சில பரிசோதனைகளின் மூலம் உறுதிசெய்துள்ளனர். ராணுவத்தில் காயமடைந்தவர்-களின் காயங்கள் சில நாட்களில் சரியாகி அவர்கள் பணிக்குத் திரும்பிவிடுகின்றனர். அதே நேரத்தில் இறைச்சியைக் குறைவாக அல்லது இறைச்சியையே உண்ணாதவர்களின் காயங்கள் ஆறுவதற்கு மருந்துகளும் அதிகம் தேவைப்படுகின்றன, காயம் ஆறுவதற்கும் அதிக நேரம் எடுக்கிறது என்று தெரியவந்துள்ளது. இறைச்சி மட்டுமல்லாத மூளை வளர்ச்சிக்கு மீன்கள் மிகவும் முக்கிய-மானவையாகும். மீன்கள், கருவாடு போன்ற இதர கடலுணவு பொருட்கள் நமது மூளைக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

கடலுணவு அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்கள், சீனர்கள், கொரிய மற்றும் தைவான் நாட்டினர், இறைச்சியை அதிகம் சாப்பிடும் அய்ரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள் தொழில்நுட்பத்திலும், புதிய கண்டுபிடிப்புகளிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குவதைக் காண்கிறோம்.  குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டீர்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகளின் உணவுகளில் தேவையற்ற பொருட்கள் அதிகம் இடம் பெறுகின்றன. அதாவது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட திண்பண்டங்களை மிகவும் அதிக அளவில் 3 முதல் 16 வயதுள்ளவர்கள் பயன்படுத்துகிறார்கள். பாக்கெட்டுகளில் உள்ள பொருட்கள் இயற்கையான சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. இனிப்பு, புளிப்பு, காரம் மற்றும் துவர்ப்புச் சுவை ஊட்டக்கூடிய வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன.

(நமது வீட்டில் அம்மா சமைக்கும் போது மிளகு, புளி, வெங்காயம், பூண்டு, மிளகாய், கிராம்பு, கொத்தமல்லி போன்றவை இயற்கையாக உள்ள சுவையூட்டும் காரணிகள். இவற்றால் நமது உடலுக்கு எந்த ஒரு தீமையும் ஏற்படுவதில்லை. இவை உணவில் உள்ள சத்துகளை எளிதில் உடலில் சேர்க்கும் பணிகளைச் செய்து தானே அத்தியாவசியமான சத்துகளாகவும் மாறுகின்றன.)

ஆனால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுகள் அப்படி அல்ல. அந்த பாக்கெட்டுகளைக் கவனமாகப் படித்தால் அதில் செயற்கை வண்ணம் செயற்கைச் சுவையூட்டி போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதை எழுதியிருப்பார்கள். புளிப்பு, இனிப்பு, காரம், துவர்ப்பு உள்ளிட்ட அனைத்து சுவைகளுக்கும் வேதிப்பொருட்கள் கிடைக்கின்றன, இதில் சிலவற்றை உணவுப்பொருளில் சேர்ப்பதற்கு அரசு அனுமதிக்கிறது.

இந்த செயற்கைச் சுவையூட்டிகள் கொண்ட உணவைத் தொடர்ந்து சாப்பிடும் போது, முக்கியமாக உடலின் செரிமான மண்டலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது, இறைப்பை இந்த செயற்கை சுவையூட்டிகளைக் கரைப்பதற்காக அதிக அளவு அமிலத்தைச் சுரக்கிறது, இதனால் இறைப்பை அரிக்கப்பட்டு புண்கள் ஏற்படுகின்றன, அதுமட்டுமல்லாமல் இந்த செயற்கைச் சுவையூட்டிகள் ரத்தத்தில் கலப்பதால், உடலுக்கு தேவையில்லாத பொருள் செல்களுக்குள் ஊடுருவிவிடாமல் பாதுகாக்கும் பொருட்டு உருவாகும் கொழுப்பு படலம், இந்த செயற்கை சுவையூட்டிகளை சூழ்ந்துகொள்கிறது, இதை அழிக்க வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன, அடிக்கடி இது போன்று வெள்ளையணுக்கள் அதிகம் உற்பத்தி ஆவதால், உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையும் குழந்தைகளுக்கு குறைந்துவிடுகிறது.

சிறுவயதிலேயே நீரழிவு (SUGAR)  ஏற்பட செயற்கைச்  சுவையூட்டிகள் மிகவும் முக்கியமான காரணமாகும், ஆகவே  ஸ்நாக்ஸ்  என்ற பெயரில் தினசரி சிப்ஸ் உள்ளிட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பொருட்களை  சாப்பிடவேண்டாம். ஸ்நாக்ஸ் என்பதை குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டிலேயே குறைந்த செலவில் தயாரிக்கலாம்.

சோளம், வேர்க்கடலை, கொண்டைக்கடலை, கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் குழந்தைக்கு விருப்பமான பல உணவுகளைத் தயாரிக்கலாம், இவற்றை அவிப்பது, வறுப்பது அதனுடன் மிளகுத்தூள், வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம், அதே போல் வெல்லத்தைப் பாகாக்கி அதில் கடலை, கம்பு, கேழ்வரகு போன்றவற்றை நன்கு வறுத்து  வெல்லப்பாகுடன் சேர்த்து அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பத்திரப்படுத்தி வைத்தால் குழந்தைகள் கேட்கும் போது கொடுக்கலாம். இவை எல்லாம் குழந்தைகளின் உணவு மண்டலத்தைச் சீராக்குவதுடன் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்துகளையும் தருகின்றன.

உடனடி சத்துகளைத் தரும் அரிசிப்பொரி

கடைகளில் விற்கும் மசாலா கலந்த பொரிகள் அல்லாமல், உப்பு கலந்து அல்லது கலக்காத பொரியுடன் வெங்காயம், சிறிதாக வெட்டிய புதினா, மிக்ஸியில் அரைத்த நெல்லிக்காய் போன்றவற்றுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடுவது பள்ளியில் இருந்து வந்த பிறகு ஏற்படும் களைப்பை நீக்குவது மட்டுமல்லாமல், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் மற்றும் கார்போஹைட்ரேட் அடங்கிய எளிமையான உணவு ஆகும். அதே நேரத்தில் இதைச் செய்வதற்கு நேரமும் அதிகம் எடுக்காது. இத்துடன் கடலை, அவித்த பாசிப்பயறு, எலுமிச்சைச் சாறு, அவித்து மசிக்கப்பட்ட உருளைக் கிழங்கு போன்றவற்றையும் சேர்க்கலாம்.

மீன் இறைச்சி போன்றவற்றை நாம் உணவில் மட்டுமே சேர்க்கவேண்டும் என்ற ஓர் எண்ணத்தை உருவாக்கிவிட்டோம், அப்படி அல்ல, இறைச்சித் துண்டங்களையும், மீன்களையும் மாலை நேரங்களில் அதிக மசாலாக்களோ, அதிக எண்ணெய்யோ சேர்க்காமல் பொறித்து எப்போது வேண்டுமானால் தரலாம். பெற்றோர்கள் இதற்காக சிறிது நேரம் எடுத்துச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் கடைகளில் விற்கும் பாக்கெட்டுப் பண்டங்களை வாங்கித்தரும் பட்சத்தில் குழந்தைகளுக்கு அதிகமான மருத்துவச் செலவு செய்ய நேரிடும்.

ஆகவே குழந்தைகளே நீங்கள் 18 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுதான் உங்களை நூறுவயது வரை ஆரோக்கியமாக வாழவைக்கும். அதற்கேற்றவாறு உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள், கடைகளில் விற்கும் பண்டங்களைக் குறைத்து வீட்டில் எளிமையாக தயாரிக்கப்படும் உணவைச் சாப்பிடுங்கள், வீட்டில் சமைத்துத்தரச் சொல்லுங்கள்.

தவிர்க்க வேண்டியவை

பாக்கெட்டில் வரும் சிப்ஸ் உள்ளிட்ட உணவுகள்,  குளிர்பானங்கள், எண்ணெயில் பொறித்த உணவு வகைகள்.

அதிகம் சாப்பிடவேண்டியவை

சோளம், வேர்க்கடலை, கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு, மீன், இறைச்சி இத்துடன் அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளான அரிசிச்சோறு, கம்பஞ்சோறு, கோதுமை ரொட்டி, எலும்பு ரசம்(சூப்) காய்கறிகளில் செய்த சூப், முட்டை, பழங்கள், போன்றவற்றுடன் வெல்லத்தில் செய்யப்பட்ட தின்பண்டங்கள் சாப்பிடலாம். யாராவது இறைச்சி சாப்பிடக்கூடாது என்று கூறினால் நீங்கள் உரக்கச் சொல்லுங்கள்... என் உணவு, என் உரிமை!

Share