தும்தும் நம்நம் சாகரா
Print

கதை கேளு… கதை கேளு…

கழுகு வந்ததும் இரவு விருந்து மரத்தில் துவங்கியது. அந்த மரம் பள்ளி மைதானத்தில் அமைந்து இருந்தது. இரவு விருந்தினை அந்த மரத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் குருவிக்குடும்பம் ஏற்பாடு செய்திருந்தது. அக்கம்பக்கம் இருந்த பல வித பறவை-களையும் குருவி அழைத்து இருந்தது. விருந்தாக படைக்கப்பட்ட பலவித தழைகளையும் பழங்களையும் பறவைகள் ரசித்து உண்டன. விருந்து நடந்துகொண்டிருக்கும்போதே தாய்க்குருவி ஓவென அழத் துவங்கியது.

இந்த விருந்துதான் நாம ஒன்னா இந்த மரத்தில சாப்பிடப்போற கடைசி விருந்து. இந்த மரத்தை வெட்டப்போறாங்களாம் என்று சொல்லி அழுதது தாய்க்குருவி.

அங்கே துடுக்காக இருந்த இளங்குருவி ஒன்று நட்பு பறவைகளே, என் பெயர் சாதிரன். உங்களை எல்லாம் இங்கே வரவழைத்தது நான் தான். ஒரு துக்கமான விருந்திற்காக அல்ல. மிக முக்கியமான ஒரு பணிக்காக இங்கே உங்களை வரவழைத்தேன். உங்களுடைய ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. ஆம், இந்த மரத்தினை வெட்ட இருக்கின்றார்கள். அதனைத் தடுக்க வேண்டும். அதற்கு உங்கள்  உதவி வேண்டும்.

திட்டத்தினை இளம்குருவி விவரித்ததும் எல்லோரும் வாயைப்பிளந்தார்கள். இது சாத்தியமா குட்டிக்குருவி? என்றும் சந்தேகப்பட்டார்கள். ஆனால், இளங்குருவி எல்லோரையும் சமாதானப்படுத்தி நம்பிக்கை ஏற்படுத்தியது.

திட்டம் இதுதான். மரத்தினை வெட்ட வரும்போது இளங்குருவி கழுகிற்கு கத்தி செய்தி கொடுக்கும். கழுகு வலசைக்கு வந்துள்ள கொக்குகளுக்கு செய்தி கொடுக்கும். வலசைக் கொக்குகளுக்கு மட்டும் மேக அரசனுடன் பேசும் மொழி தெரியும். முன்னரே மேக அரசனுடன் பேசி ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். அவர்கள் அழைக்கும்போது அந்த மைதானத்தில் மட்டும் மழை பெய்ய வேண்டும். வெட்ட வந்தவர்கள் அடச்சே என்று நினைக்கும் வரையில் மழை பெய்ய வேண்டும். மரங்கொத்திகளும் பச்சைக்கிளியும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என நினைத்தன. அவைதான் இந்த விநோத சத்தத்தை எழுப்ப முடிவு செய்தன. மழை பெய்யும்போது, அவர்கள் மரத்தின் கீழே ஒதுங்கும்போது, தும்தும் நம்நம் சாகரா என்ற சத்தம் எழுப்ப வேண்டும். சாகரா மட்டும் கிளி சொல்ல வேண்டும். தும்தும் ஒரு மரக்கொத்தியும், நம்நம் ஒரு மரக்கொத்தியும், சாகராவை கிளியும் சொல்ல வேண்டும். இவற்றை எல்லாம் பேசி முடிக்க நடு இரவானது.

மறுநாள் மரத்தை வெட்ட ஆட்கள் வந்தார்கள். திட்டப்படி இளங்குருவி கத்தி அழைக்க, கழுகு, வலசை கொக்கு, மேகங்கள், மரங்கொத்திகள் எல்லாம் செயலில் இறங்கின. தொப தொபவென மழை. மரத்திற்கு கீழே நனையாமல் ஒதுங்கினார்கள். அடச்சே நாளை வெட்டலாம் என்று கிளம்பிவிட்டார்கள். மறுநாளும் இப்படித்தான். அதற்கு மறுநாளும் அப்படித்தான். ஒரு பத்து நாட்களுக்கு இப்படியே நடந்தது. அது கோடைக்காலம். பசங்க வருவதற்குள் ஏதாச்சும் செய்யலாம் என நினைத்திருந்தார்கள். தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்டில் கூட இப்படி மழை பெய்யும் என்ற எந்த தகவலும் இல்லை.

பகலில் வந்தால்தான் மழை பெய்கின்றது என திட்டமிட்டு, இரவில் வெட்டலாம் என முயற்சியில் ஈடுபட்டார்கள். எல்லாப் பறவைகளும் உறங்கி-விட்டன. முதல் வெட்டு விழுந்தவுடன் ஆந்தை தும்தும் நம்நம் சாகரா என சத்தமாக கத்த, எல்லாப் பறவைகளும் எழுந்துவிட்டன. அடுத்த அய்ந்தாவது நிமிடத்தில் மழையும் வந்துவிட்டது. ஆந்தை தன் சகாக்கள் அனைத்தையும் அழைத்தது, சுமார் ஆயிரம் வௌவால்களையும் அழைத்தன. எல்லோரும் ஒரு சேர தும்தும் நம்நம் சாகரா எனச் சொல்ல வெட்டவந்த மனிதர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். நிர்வாகம் மரம்வெட்டும் எண்ணத்தை கைவிட்டது.

மறுநாள் காலை விடியும்போதே மழை பிடித்தது. அட! வெட்ட வந்துட்டாங்களா திரும்ப? என ஒவ்வொரு பறவையாக வெளியே வந்தது. ஆனால் ஆட்கள் யாரையும் காணவில்லை. என்ன விஷயம்? என வலசைக்கொக்கு கேட்க, மேக அரசனோ, அட! இது வழக்கமான மழைப்பா, உங்க கவலைகளை மறந்து உற்சாகமாக நனையுங்க! என்றதும் எல்லா பறவைகளும் ஆடிப்பாடி வெற்றியைக் கொண்டாடின.

- விழியன்

Share