மந்திரத்தால் மணல் சர்க்கரையாகுமா?
Print

காரணமின்றி ஏற்காதீர்கள்

சிகரம்

மந்திரத்தால் மண்ணை அள்ளிச் சர்க்கரையாக மாற்றுகிறேன் என்று காட்டுகிறார்கள். மாங்காய் வரவழைத்துக் காட்டுகிறார்கள். வெள்ளைத் தாளை ரூபாய் நோட்டாக மாற்றுகிறார்கள். பார்க்கும்போது மக்களுக்கு வியப்பாக இருக்கிறது. ரூபாய் நோட்டை எரித்துவிட்டு பின் அதே நோட்டை எரியாமல் காட்டுகிறார்கள். கடிகாரத்தைக் கைக்குட்டையில் வைத்து நொறுக்கி, பின் மீண்டும் அதே கடிகாரத்தை நல்ல முறையில் காட்டுவார்கள். காண்போர்க்கு கண்கள் அகலும். வியப்பு! வியப்பு! ஒரே வியப்பு!

மந்திரம் இல்லாமலா இப்படி நடக்கும்? கேள்வி கேட்டு நம்புகிறார்கள்.

ஆனால், இவை அனைத்தும் மந்திரத்தால் அல்ல; தந்திரத்தால். மேஜிக் என்பது ஒரு கலை. விரைவாகவும், திறமையாகவும் செய்வதில்தான் அதன் வெற்றியுள்ளது.

சிறந்த மந்திர தந்திரக் கலைஞர் சர்க்கார் அற்புதக் காட்சிகளையெல்லாம் காட்டுவார். அவை அனைத்தும் மந்திரத்தால் அல்ல என்பதை அவரே ஒப்புவார். சில தந்திர யுக்திகளைக் கையாண்டே அவ்வாறு செய்கின்றனர்.

ஆழ்ந்து சிந்தித்தால் இவையெல்லாம் உண்மையல்ல என்பது தெளிவாகும்.

மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியும் என்றால் மாந்தோப்பு எதற்கு? நாட்டில் அரிசிப் பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் மந்திரவாதியைக் கொண்டு அரிசி வரவழைத்துக் கொள்ளலாமே!

நமக்குத் தேவையானவற்றை நாம் ஏன் உழைத்து உற்பத்தி செய்ய வேண்டும். மந்திரவாதியைக் கொண்டு மலை மலையாய் உற்பத்தி செய்து கொள்ளலாமே?

மந்திரத்தால் மணலைச் சர்க்கரையாக்கிக் கொள்ளலாம் என்றால், கரும்பு பயிர் வைப்பது ஏன்? சர்க்கரை ஆலை கட்டுவது ஏன்?

உடைந்த கடிகாரத்தை நல்ல கடிகாரமாக மாற்ற முடியும் என்றால் எந்தப் பொருள் உடைந்தாலும் ஏன் கவலைப் பட வேண்டும்? மந்திரவாதியை விட்டு ஒழுங்காக்கி விடலாமே?

எரித்த ரூபாய் நோட்டு மீண்டும் வரும் என்றால், தீ விபத்தில் நாசமான பொருட்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? மந்திரவாதியை விட்டால் மீண்டும் பழையபடி கொடுத்துவிடுவாரே! முடியுமா?

மந்திரம் மூன்றே முக்கால் நாழிகைதான். அதனால்தான் அப்படிச் செய்வதில்லை என்று இதற்கும் சப்பைக்கட்டு கட்டுகின்றவர்கள் உண்டு.

ஒன்றரை மணி நேரந்தான் பலிக்கும் என்றா மணலை சர்க்கரையாக்கி நம்மிடம் மந்திரவாதி கொடுக்கிறார், ஒன்றரை மணி நேரங் கழித்து அது மீண்டும் மணலாக மாறுமா? மாறாதே!

இவையெல்லாம் உணர்த்துவது என்ன?

மந்திரம் என்பது பொய். தந்திரமாகவே சில காரியங்களைச் செய்கிறார்கள் என்பதுதானே!

மந்திரம் உண்மையென்றால் மந்திரவாதிதான் உலகை ஆளுவான்! ஆனால், மந்திரவாதியே சோற்றுக்குத் திண்டாடுகிறானே? அரிசியும், பணமும் உருவாக்குவேன் என்கிறவன், அரிசிக்கும் பணத்திற்கும் ஏன் நம்மிடம் வருகிறான்? சிந்திக்க வேண்டும்.

கண்ணுக்கு மையழகா?

குழந்தைகளுக்குக் கண்ணுக்கு மையிடுகின்ற வழக்கம் காணப்படுகிறது. பெரியவர்கள் கூட இட்டுக் கொள்கின்றனர்.

மையிடுவதால் கண்கள் அழகாகவும், அகலமாகவும் இருக்கும் என்று எண்ணுகிறார்கள்.

கண் என்பது உடல் உறுப்புகளில் மிகவும் கவனமாகவும், பொறுப்பாகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் உறுப்பாகும். அப்படிப்பட்ட ஓர் உறுப்பில் தேவையற்றதை, கேடு பயப்பதைப் பூசி பாதிப்பை உண்டு பண்ணக் கூடாது.

கண் மையில் உள்ள கார்பன் கண்ணுக்குக் கேடு பயப்பதாகும். தொடர்ந்து கண்ணுக்கு மையிடுவது விஷம் ஆகும். உடல் வளர்ச்சியைத் தடுத்தல், மனநிலையைப் பாதித்தல், வலிப்பு நோயை உருவாக்கல் போன்றவை இதன் கேடுகள் ஆகும்.

எனவே, குழந்தைகளுக்கு மையிடுவதும், பெரியவர்கள் மையிட்டுக் கொள்வதும் கண்ணுக்குக் கேடாகும்.

கண்ணுக்கு மையழகு என்பது தவறு. அழகை மட்டும் பாராது அதன் விளைவுகளையும் பார்ப்பதே அறிவுடைமையாகும். கண்ணுக்குக் கூர்மை அழுகு, பார்வை அழகு, காண  வேண்டுவதைக் காணல் அழகு! மை அழகல்ல.

Share