Home 2018 நவம்பர் 2018 நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும்
வியாழன், 22 ஆகஸ்ட் 2019
நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும்
Print E-mail

-சரவணா இராஜேந்திரன்

ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி என்று ஒருதரப்பு புறப்படுவார்கள். அக்டோபரில் துர்க்காபூஜா, நவராத்திரி என்றும், நவம்பரில் தீபாவளி, அதன் பிறகு கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் வரை ஒரு பரபரப்பு நிலவுவதைக் காணலாம்.

ஆகஸ்ட் மாத இறுதியில்தான் நாம் பள்ளியில் சேர்ந்து பாடங்களை புரிந்துகொண்டோமா என்பதை உறுதிசெய்யும் காலாண்டுத் தேர்வுகள் துவங்கும், அது முடிந்து நவம்பர்_டிசம்பரில் நமது முதல் கல்வித்தகுதி தேர்வுகளான அரையாண்டுத் தேர்வுகள் துவங்கும். ஆனால் இந்தத் தேர்வுகளை நாம் சந்திக்கும் சூழல் உள்ளதா? எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் பள்ளித் தேர்வுகளைச் சந்தித்து வருகிறோம் என்று சிந்தித்ததுண்டா?

ஆடித் திருவிழாக்கள் என்ற பெயரில் ஜூலை இறுதி வாரம் தொடங்கி, ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை நடுத்தர மக்கள் வாழும் பகுதிகளில் கோவில்களில் உரத்த ஒலியில் இரவு வரை பாடல்களைப் போட்டுக்கொண்டு, வாரம் முழுவதும் தெருக்களை அடைத்து மேடைகள் போட்டு ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும் இருக்கும். முன்பு இந்த திருவிழாக்கள் அவ்வளவாக பரபரப்பின்றி நடக்கும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக நீதிமன்றம் தடைவிதித்தும் இரவு முழுவதும் இத்தகைய நிகழ்ச்சிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுமல்லாமல் பள்ளிக்குழந்தைகளின் சில நாட்கள் படிப்பை சீர்குலைத்துவிடுகின்றனர். இப்போது நாம் இந்தியாவில் பெருவாரியான மக்கள் கொண்டாடும் விழாவினைப் பார்ப்போம்.

தீபாவளி

இந்த விழா காரணமாக கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து மிகப்பெரும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது.  இது குறித்து தீபாவளி முடிந்த மறுநாளும் அதன் தொடர்ச்சியாகவும் வரும் நாளிதழ் செய்திகளையும் பார்த்தாலே நாம் புரிந்து கொள்ளலாம்! 2012 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் மும்பையைச் சேர்ந்த ஆதித்யஜோதி என்ற கண் மருத்துவமனைக் குழுமம் கொடுத்த அறிக்கையில் தீபாவளி பட்டாசு வெடிப்பினால் ஏற்பட்ட தீக்காயம், பட்டாசுப் புகையினால் ஏற்பட்ட பாதிப்பு, பட்டாசு வெடிப்பின்போது பறந்துவந்த துகள்கள் போன்றவை பட்டதால் மகாராஷ்டிராவில் மட்டும் 320 பேர் நிரந்தரமாக பார்வை இழந்துள்ளனர். இந்தியா முழுவதும் 2014 மற்றும் 2015 ஆண்டு தீபாவளி முடிந்த பிறகு மேற்கூறிய காரணங்களால் 2800 பேர் நிரந்தரப் பார்வை இழந்துள்ளனர். இது பெருநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தவர்கள் குறித்த பட்டியல் மட்டுமே! தனியார் மருத்துவமனைகள், சுகாதார மய்யங்கள் போன்றவற்றின் பட்டியலை எடுத்துக்கொண்டால் குறைந்த பட்சம் ஆண்டிற்கு 5000 நபர்களாவது தீபாவளிப் பட்டாசு வெடிப்பின் காரணமாக பார்வை இழக்கின்றனர். பார்வை இழப்பை ஏற்படுத்தும் கொண்டாட்டங்களை எப்படி விழா என்று கொண்டாட முடியும்.

சரி இந்த தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்?  அதற்கான காரணம் என்ன? இந்த தீபாவளி ஏதாவது விழிப்புணர்வைக் கொண்டுவருகிறதா? வசதியற்றவர்களுக்கு நலம் பயக்கும் செயல் ஏதாவது நடைபெறுகிறதா? அல்லது சமூகத்தில் இந்த விழாவினால் ஏதாவது நன்மை ஏற்படுகிறதா? இந்த கேள்விகளை நீங்களே கேட்டுக்கொண்டு அதற்கான பதில்களைப் பெற முயலுங்கள் அல்லது உங்கள் பெற்றோரிடம் இது குறித்து விவாதியுங்கள். தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கதை. அவை பெரிதும் நடைபெறாத கற்பனைக் கதைகள் ஆகும்.

வடமாநிலங்களில் குறிப்பாக உத்திரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ராமன் சீதையை சிறிலங்காவில் இருந்து மீட்டு வந்து. மீண்டும் அயோத்தியில் அரியனை ஏறிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் செல்வத்திற்கு உகந்த ஆண்டு பிறந்ததாக புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.  இந்த நாளில் வங்கிகள் மற்றும் பங்கு வர்த்தகத்தில் புதுக்கணக்கை துவங்குவார்கள்.   மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் ஆண்டிற்கு மூன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஒன்று ஆங்கிலப் புத்தாண்டு, மற்றொன்று குடிபடவா எனப்படும் மகாராஷ்டிர புத்தாண்டு, மற்றொன்று தீபாவளிக்கென்று வரும் செல்வத்திற்கான புத்தாண்டு.

தமிழகத்தில் வித்தியாசமான ஒரு கதை சொல்லி தீபாவளி கொண்டாடுவார்கள். அதாவது விஷ்ணு நரகாசுரனைக் கொலைசெய்தாராம். நரகாசுரன் சாகும் போது எனது மரணத்தை அனைவரும் கொண்டாடவேண்டும் என்று கூறினாராம். ஆகையால் அன்றிலிருந்து தீபாவளி கொண்டாடுகின்றார்களாம். இதற்கு தேதி மாதம் ஆண்டு என்று ஏதாவது சான்று உண்டா என்றால் இல்லை?

பீகார் மற்றும் மேற்குவங்கத்தில் சில மன்னர்கள் கொடுங்கோல் அரசரை எதிர்கொண்டு அவர்களை வெற்றி பெற்றதைக் கொண்டாடுகின்றனர். ஜைனர்கள் வர்த்தமான மகாவீரர் பரிநிப்பானம் அதாவது மகாவீரர் மனித வடிவில் இருந்து இறைநிலையை அடைந்துவிட்டார் என்று நம்பி தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொருவித கதைகள் சொல்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது தேவையில்லாமல் ஒரு நிகழ்வை மக்களிடையே திணிக்கவேண்டும் என்ற நோக்கோடு சிலர் ஆரம்பித்ததை தொடர்நிகழ்வாக தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிக்கும் கொண்டு சென்று அனைவரும் ஏற்கும் வகையில் வற்புறுத்தி திணித்துவிட்டனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 18-ஆம் நூற்றாண்டில் தீபாவளி ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அதுவும் தீபம் ஏற்றிவைத்து ஒரு நாள் கொண்டாடினார்கள் என்று தான் பதிவில் உள்ளது.  அதற்கு முன்பு தீபாவளி தமிழகத்தில் கொண்டாடப்பட்டதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. முக்கியமாக 1990-களுக்குப் பிறகு உலகமயமாக்கல், தடையற்ற வணிகம் தனியார் துறை முதலீடு போன்றவற்றிற்குப் பிறகு தீபாவளி என்னும் பண்டிகை வர்த்தக நிறுவனங்களின் லாபநோக்கிற்காகவே அதிக விளம்பரங்கள் செய்து, தீபாவளி குறித்த பல கட்டுக் கதைகளைப்  பரப்பி விட்டார்கள். இருப்பினும் இன்றளவும் பெருவாரியான கிராமங்களில் தீபாவளி சென்றடையவில்லை என்பது சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களுக்கு சிறிது ஆறுதலான செய்தியாகும்.

- தொடரும்...

Share