Home 2018 நவம்பர் 2018 பெரியாரின் எழுத்துத் திறமை!
திங்கள், 25 ஜனவரி 2021
பெரியாரின் எழுத்துத் திறமை!
Print E-mail

சுகுமாரன்

ஓவியம்: கி.சொ

பெரியார் சொன்னதைச் செய்வார். செய்வதைச் சொல்வார்.

பெண் விடுதலைக்காகப் பெரியாரைப்போல் புரட்சிக் கருத்துகள் சொன்னவர்கள் வேறு யாருமில்லை. பெரியார் சொன்னதுடன் நிற்கவில்லை. அப்புரட்சியை தன் குடும்பத்திலும் செய்து காட்டியவர்.

அந்தக் காலத்தில் விளையாட்டுத்தனமாக பொம்மைக் கல்யாணம் போல் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். இவ்விபரீதப் பழக்கத்தால் கொடிய துன்பத்திற்குப் பெண்கள் உள்ளானார்கள்.

பெரியாரின் தங்கை மகளுக்கும் இக் கொடிய துன்பம் நேர்ந்தது. பெரியாரின் தங்கை மகளின் பெயர் அம்மாயி. அவருக்கு 10 வயதில் திருமணம் நடந்தது. கணவன் 13 வயது சிறுவன். அவனுக்கு ஒரு நாள் விஷபேதி வந்தது. இறந்து போனான்.

அம்மாயி 10 வயதில் விதவையானாள். என்ன கொடுமை இது?

வளர்ந்து பெரியவள் ஆன அம்மாயிக்கு தன் நிலைமை புரிய ஆரம்பித்தது. திடுக்கிட்டாள். துடிதுடித்து அழுதாள்.

கணவன் இல்லாத அம்மாயி பூ வைத்துக் கொள்ளக் கூடாது. பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது. தன்னை அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது. ஏன், நல்ல உணவுகூட சாப்பிடக் கூடாது. எத்தனையோ கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும்.

வாழ்விழந்து நின்ற அம்மாயிக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க வீட்டிலுள்ள பெரியவர்கள் கனவிலும் பயந்தார்கள்.

அம்மாயி மாமாவான பெரியாரின் காலில் விழுந்து அழுதாள். எனக்கு 10 வயதில் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லி நான் கேட்டேனா? எனக்கு ஏன் இந்த நிலைமை மாமா? என்று கதறி அழுதாள்.

அம்மாயி படும் துன்பத்தைப் பார்த்து பெரியாரும் அழுதுவிட்டார். அந்த நிமிடமே பெரியார் ஒரு முடிவுக்கு வந்தார். அம்மாயிக்கு மறுமணம் செய்து வைப்பேன் என்று சபதம் செய்தார்.

வீட்டில் பெரியார் மெதுவாக அம்மாயியின் மறுமணப் பேச்சை எடுத்தார். அவ்வளவுதான். பெரியவர்கள் தாம்தூம்... என்று குதித்தார்கள். கூடாது என்று கெட்ட சாத்திரம் பேசினார்கள். ஜாதிப் பெருமையைக் காட்டினார்கள்.

பெரியார் பின் வாங்கவில்லை. ஒரு ரகசியத் திட்டம் தீட்டினார்.

பெரியாரின் குணம் எல்லோருக்கும் தெரியுமே. சொன்னதை செய்து விடுவார் அல்லவா? அதனால் வீட்டிலுள்ள பெரியவர்கள் மிகப் பயந்தார்கள். அம்மாயியை வெளியே எங்கும் செல்லவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். பெரியாரையும் கண்காணித்து வந்தார்கள்.

பெண்கள் கோயிலுக்குச் செல்லத் தடை இல்லை அல்லவா? அம்மாயியை சிதம்பரம் கோயிலுக்கு அனுப்பி வைத்தார் பெரியார். தனது மைத்துனரின் சகோதரரை சந்தித்து அம்மாயியை திருமணம் செய்துகொள்ள வேண்டினார். அவரும் சம்மதித்தார். மாப்பிள்ளையைத் தனியாக சிதம்பரம் அனுப்பினார். சந்தேகம் வந்துவிடக் கூடாது அல்லவா? அதனால் பெரியார் அத்திருமணத்திற்குச் செல்லாமல், தன் நண்பரைக் கொண்டு தன் மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்தார்.

பெரியார் சொல்லிலும் செயலிலும் உண்மையாக இருந்தார்.

சிறைப் பறவை

ஒருமுறை பெரியார் சென்னையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அரசாங்கத்தைத் தாக்கிப் பேசியிருந்தார். அதனால் அவர்மீது வழக்குப் போடப்பட்டது.

வழக்கில் ஆஜராக பெரியார் சென்னை வந்தார். திரு.வி.க. வீட்டில் தங்கினார். திரு.வி.க. வீடு ராயப்பேட்டையில் இருந்தது. இருவரும் இரவு 10 மணி வரை நாட்டு நடப்புகளைப் பேசிக்கொண்டு இருந்தனர்.

பிறகு பெரியார் ஒரு திண்ணையிலும், திரு.வி.க. ஒரு திண்ணையிலும் படுத்துத் தூங்கினர்.

இரவு 11 மணி இருக்கும். நல்ல மழை பெய்யத் தொடங்கியது. திரு.வி.க. எழுந்துகொண்டார் பெரியாரை எழுப்பினார். பெரியார் கண்விழிக்கவில்லை.

மழை கடுமையாக பெய்தது. தெருவில் வெள்ளம் பெருகிறது.

திரு.வி.க. பெரியாரை மீண்டும் மீண்டும் எழுப்பினார். பயனில்லை. பெரியார் உறக்கத்திலிந்து எழவில்லை.

மழை இரவு முழுவதும் பெய்தது. பெரியார் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எழுந்தார்.

திரு.வி.க.வுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. என்ன வைக்கம் வீரரே, இரவு மழை பெய்தது. தெரியுமா? என்று கேட்டார்.

மழையா? எனக்குத் தெரியாதே! என்றார் பெரியார்.

நாளைக்கு வழக்கு இருக்கிறது. சிறைத் தண்டனை நிச்சயம் உண்டே! கவலை இல்லாமல் தூங்கினீரே. ஆச்சரியம் அய்யா, உமது குணம் என்றார் திரு.வி.க.

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை _ எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற பாவேந்தரின் கவிதை வரிகள் பெரியாருக்குப் பொருந்தும். பெரியார் சிறைப் பறவையாக வாழ்ந்தார்.

Share