நோபல் பரிசு 2018
Print

உலகத்தின் முக்கியமான சாதனையாளர்களுக்கு ஆறு துறைகளில் வழங்கப்படும் நோபல் பரிசின் இந்த ஆண்டுக்கான விருதாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் டோனா ஸ்டிரிக்லாண்ட் கனடாவை சேர்ந்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின் மற்றும் ஃபிரான்ஸை சேர்ந்த ஜெரால்ட் மொரூவுடன் இந்த பரிசை பகிர்ந்து கொள்கிறார். சீரொளி இயற்பியல் (Laser Physics) துறையில் இவர்கள் ஆற்றிய பணிக்காக இவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 58 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியலில் ஒரு பெண் நோபல் பரிசு பெற்றுள்ளார் என்பது மற்றோரு சிறப்பு

அமைதிக்கான நோபல் பரிசு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையை ஒரு ஆயுதம் போல் பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளர் நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

வேதியலுக்கான நோபல் பரிசு நொதி (என்சைம்) தொடர்பான ஆய்வில் தங்களின் கண்டுபிடிப்புகளுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு  வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களான பிரான்சஸ் எச். அர்னால்டு மற்றும் ஜார்ஜ் பி. ஸ்மித், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலுள்ள பிரிடன் கிரகோரி வின்டர் ஆகியோர் இந்தப் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பானை சேர்ந்த டசூகு ஹோஞ்சோ  பெறுகிறார்கள். புற்று நோய் சிகிச்சைக்கு 'இம்யூன் செக் பாயிண்ட் தெரபி' (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக இரண்டு பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பருவநிலை மாற்றம் உண்டாக்கும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த ஆய்வுக்காக அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்கள் வில்லியம் டி. நார்தாஸ் மற்றும் பால் எம். ரோமர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்ததற்காக அவர்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுபவரைத் தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக இவ்வாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

- சரா


 

Share