மல்லிகை | |||
|
மல்லிகை மலரும் மாலையிலே வாசனை கமழும் சோலையிலே கள்ளமில் லாத உள்ளத்தைப் போல் வெள்ளை நிறந்தான் மேனியிலே. கற்றவ ரோடு சேர்வதனால் மற்றவர் அறிவைப் பெறுவதுபோல் கட்டிய வாழை நாரினுக்கும் கமழ்ந்திடும் வாசம் தந்துவிடும். தேரென மெதுவாய் நடைபழகும் தென்றலின் மூலம் நறுமணந்தான் ஊரெங்கும் பரவும் பேதமின்றி ஊறிய தேனும் கலந்து வரும். சூரியன் மறையும் மேற்றிசையில் திங்களும் தோன்றும் கீழ்த்திசையில். பேரழ கதனைக் காண்பதற்கு மல்லிகைப் பூக்கள் கண் மலரும். மலர்களில் மிகவும் சிறியதுதான். புலவர்கள் புகழும் சிறந்ததுதான். கலையழ குடைய மல்லிகைபோல் கள்ளமில் லாமல் நாம் சிரிப்போம். -சி.விநாயகமூர்த்தி, திருவில்லிபுத்தூர்
|