Home 2018 டிசம்பர் 2018 தித்தித்தா விட்ட பட்டம்
வியாழன், 21 அக்டோபர் 2021
தித்தித்தா விட்ட பட்டம்
Print E-mail

கதை கேளு… கதை கேளு…

விழியன்

கிராமத்திற்குச் சென்று ஊர் திரும்பி இருந்தாள் தித்தித்தா. பள்ளி துவங்கிவிட்டது. முதல் நாள் முதலே பட்டம் விடவேண்டும், பட்டம் விடவேண்டும் என அம்மாவை நச்சரித்தாள். நீ இப்போது மூன்றாம் வகுப்பு சென்றுவிட்டாய், நீயே போய் கடையில் வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார். கையில் கொஞ்சம் காசும் கொடுத்து அனுப்பினார். முந்தைய நாளே தன் பள்ளி அக்காக்களிடம் எங்கே பட்டம் கிடைக்கும்? என விசாரித்து வைத்திருந்தாள். தன் தம்பியை துணைக்கு அழைத்துக்கொண்டு அந்த அலங்காரப் பொருள் விற்கும் கடைக்குச் சென்றாள்.

கால்மணி நேரமாகத் தேடி, தித்தித்தாவும் அவள் தம்பியும் இரண்டு பட்டங்களை எடுத்தார்கள். இரண்டுமே வண்ணங்களே இல்லாத வெள்ளைப் பட்டங்கள். என்ன பசங்களா இவ்ளோ நேரம் தேடி இதை எடுத்திருக்கீங்க? என்றார் குள்ளமாக இருந்த கடைக்காரர். தம்பி தனக்கு வண்ணம் தீட்டப் பெட்டி வாங்கிக்கொண்டான். ஏனோ கடைக்காரர் தன் மேசைக்கு கீழே இருந்த வண்ணப்பெட்டியை கொடுத்தார். இதற்கு காசு வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்.

தன் வீட்டு மாடியில் பட்டம்விட போதிய இடம் இல்லை. சனிக்கிழமை காலையில் பக்கத்து கிரிக்கெட் மைதானத்தில் பட்டம் விடலாம் என நினைத்துக்கொண்டாள். சனிக்கிழமை காலைக்காகக் காத்திருந்தாள். அவளுக்கு சனிக்கிழமை காலை  ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வெள்ளை பட்டத்தில் தம்பி ஓவியம் வரைந்திருந்தான். ஒரே ஒரு பட்டம் தான் இருந்தது. இப்போது சண்டை போட நேரமில்லை என பட்டத்தை எடுத்துக்கொண்டு மைதானத்திற்கு விரைந்தாள். அப்பாவிடம் முன்னரே எப்படி விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள்.

மைதானத்தின் ஓரத்தைத் தேர்வு செய்தாள். உச்சி வெயில் வருவதற்கு முன்னர் வீடு திரும்ப வேண்டும் என அம்மா சொல்லி இருந்தார்கள். நூல்கண்டினை ஏற்பாடு செய்திருந்தாள். அவ்வளவு உயரத்திற்கு எல்லாம் பறக்காது தித்து என்று நேற்று மாலை அவள் அப்பா கிண்டலடித்தார். மைதானத்தின் ஓரத்தில் ஓடிக்கொண்டே இருந்தாள். பட்டம் பறக்கவே இல்லை. காற்று எந்தப் பக்கம் வருகின்றதோ அதன் எதிர்ப்பக்கம் ஓடவேண்டும் என அவளுக்கு புரிந்தது. இப்போது மெல்ல பட்டம் மேலே பறந்தது. வேகவேகமாக ஓடினாள் இன்னும் இன்னும் மேலே பறந்தது. ஒரு கட்டத்தில் பட்டம் அவளை இழுப்பதை உணர்ந்தாள். ஆமாம் அந்தப் பட்டத்தில் இருந்த வண்ண வண்ண நிறங்களைக் கொண்ட மீன் பெரிதாகிக்கொண்டே இருந்தது.

அது தித்தித்தாவை அப்படியே தூக்கிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது. மேலே மீன், கீழே தித்தித்தா. நூல் அறுந்துவிடுமோ என்று பயந்தாள். ஆனால் நூல் வலுவாக இருந்தது. நகரத்தில் இருந்து மீன் அருகே இருக்கும் ஏரிக்கு பறந்தது. அங்கே நீர் இல்லை. தித்தித்தா இங்கே குளம் எங்கே இருக்கின்றது? என்றது மீன். கிராமத்துக்கு போற வழியில இருந்தது என்றாள். இன்னும் உயரப்பறந்து எங்கே நீர் இருக்கும் என மீன் பார்த்தது. பக்கத்தில் வந்த மேகத்திடம் கொஞ்சம் நீர் தரமுடியுமா? என கெஞ்சிக்கேட்டது. வெண் மேகம் பக்கத்தில் வந்த கருமேகத்தைக் காட்டி அங்கே போ என்றது. கரு மேகம் கருணையுடன் நீர் கொடுத்தது. தித்தித்தா எல்லாவற்றையும் நூலைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

மீன் ஒரு காட்டிற்குள் நீர்த் தேக்கம் இருந்ததைப் பார்த்தது. தீத்து நூலை விட்டுவிடு நான் அங்கே போகவேண்டும் என்றது மீன். அவள் விடவில்லை. காற்றைச் சாப்பிட்டு சாப்பிட்டு அது பெரிதாகிக் கொண்டே சென்றது. தித்தித்தாவிற்கு கொஞ்சம் பயம் கூடிப்போனது. காட்டிற்கு மேலே பறந்தது. தொமால் என்று அங்கே இருந்த நீர்த் தேக்கத்தில் விழுந்தது. பத்திரமாகத் தரை இறங்கினாள் தித்து. விழுந்த வேகத்தில் அந்த பெரிய மீன் மெல்ல மெல்ல சின்ன மீனாக மாறியது. அவள் நீர்த்தேக்கத்தில் தன் கால் நனைய அமர்ந்தாள். அந்த மீன் அவள் காலைச் சுற்றிச் சுற்றி வந்தது. அது இப்போது சாதாரண மீனாகிவிட்டது என அவளுக்கு புரிந்தது. அது அவள் கால்களை முத்தமிட்டது.

அவளுக்கு இப்போது வீட்டிற்கு எப்படி திரும்பிச்செல்வது என்ற கவலை வந்தது. அப்போது பட்ட நூலின் மறுமுனையை ஒரு நத்தை பிடித்துக் கொண்டு இருந்தது. போலாமா? எனக் கேட்டது. சரி என்று தலையாட்டினாள்! என் மீது ஏறிக்கொள் என்றது. ரயிலைவிட வேகமாக அது சென்று ஒரு மணி நேரத்தில் அவள் வீட்டு வாசலில் விட்டது. அவள் நத்தையைவிட்டு இறங்கிய அடுத்த நொடி அது காணாமல் போனது.

வெறும் நூல்கண்டினை மட்டும் எடுத்துக்-கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். குழலி வீட்டிற்குள் காத்திருந்தாள். ஏ, திங்கட்கிழமை சேவ் வாட்டர் பற்றி 5 நிமிடம் பேசணுமாம்பா, நீ தயார் செய்துட்டியா? என்றாள். காலையில் இருந்து நடந்ததை குழலிக்குச் சொன்னால் அவள் நம்புவாளா இல்லையா என யோசித்தாள். ஆமாம் குழலி, நாம தண்ணீரை சேமிக்கணும் என்றாள் சம்பந்தமில்லாமல்.

தம்பி உள் அறையில் இருந்து ஓடி வந்தான். அக்கா, எங்க போயிட்ட நான் இன்னொரு பட்டத்துக்கும் கலர் அடிச்சிட்டேன். இந்தா! என நீட்டினான். அதில் ராக்கெட்டை வரைந்திருந்தான்.

 


கடலூரில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழாவில் 2018 ஆம் ஆண்டின் தன் சிறந்த குழந்தைகளுடன் எழுத்தாளர் விருதினைப் பெற்றுள்ளார் நம் விழியன்மாமா! அவருக்கு பெரியார் பிஞ்சின் வாழ்த்துகள்!

 

Share