கின்னஸ்
Print

சாதனையின் அடையாளம்!


இயற்கையின் தோற்றத்தில் மனித சமூகம் என்றைக்குமே வித்தியாசமானதுதான். புதுமைகள் செய்வதில் மனித சமூகத்திற்கு இருக்கும் ஆர்வம் அளப்பரியது. தொடக்ககாலத்தில் ஒட்டுமொத்த சமூகமும் ஒரே மாதிரியான செயல்களை செய்திருந்தாலும்கூட பின்னாட்களில் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கோ அல்லது தனக்கான இணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கோ சாகசம் செய்ய வேண்டிய அவசியம் உருவானது. சாகசம் என்கிற வார்த்தையும் அந்த வார்த்தைக்கான செயலுமே காலம் செல்லச் செல்ல சாதனையாகப் பரிணமித்தது. செயற்கரிய வியத்தகு சாதனைகளையும் அதனை நிகழ்த்தியவர்களையும் வரலாறு பெரும்பாலும் பதிவுசெய்தே வந்திருக்கிறது.

மன்னர்கள் காலத்தில் ஒரு போரில்கூட தோற்காமல் வெற்றிவாகை சூடியவர்கள் என்று சாதனை செய்தோர், ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்யமுடியுமென்ற ஆணாதிக்க கற்பிதத்தை உடைத்து ஆட்சிக் கட்டிலில் ஏறிய இரசியா பேகம், ஜான்சிராணி, வேலுநாச்சியார், கடவுள் கோட்பாட்டை உடைத்து பரிணாமக் கொள்கையைத் தந்த டார்வின், புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த நியூட்டன், பல கண்டுபிடிப்புகள் தந்த எடிசன் என சாதனைகளையும் சாதனையாளர்களையும் ஆயிரக்கணக்கில் சொல்லிக்கொண்டே போகலாம்.

தொடக்க காலத்தில் கல்வெட்டுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் எனப் பலவற்றில் குறிப்பிடப்பட்ட சாதனைகள், நாகரிகம் வளர வளர வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள் எனப் பல படிநிலைகளைக் கடந்து இன்று சாதனை என்றாலே அது கின்னஸ்தான் என்ற நிலையை அடைந்திருக்கிறது. "கின்னஸ்" என்கிற பெயர் உண்மையில் பீர் தயாரிக்கும் நிறுவனத்தினுடையது. ஒரு பீர் தயாரிப்பு நிறுவனத்தினுடைய பெயர் உலக சாதனைப் புத்தகத்திற்குப் பெயராக இருப்பது புதுமையாக இருக்கிறதல்லவா? வரலாறு நெடுகிலும் ஒவ்வொரு புதுமையான நிகழ்வுக்குப் பின்னும் ஒரு வியக்கத்தக்க வேடிக்கையான கதை இருக்கத்தான் செய்கிறது. கின்னஸ் புத்தக உருவாக்கத்திற்கும் அப்படியான கதை ஒன்று இருக்கிறது.

சர் ஹியூக் பீவர் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்தான் கின்னஸ் பீர் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். அவர் 1951ஆம் ஆண்டு ஒருநாள் அயர்லாந்து நாட்டில் நடக்கக்கூடிய விருந்தொன்றுக்குச் சென்றார். விருந்தென்றால் நம் ஊர் விருந்தைப்போல் இல்லாமல் ஓர் ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோ மக்கள் கூட்டமாகக் கூடி துப்பாக்கி சுடும் போட்டியை நடத்தக்கூடிய விருந்து அது. இதனை ஆங்கிலத்தில் Shooting party என அழைப்பர். அப்படியான போட்டியில் அய்ரோப்பாவில் இருக்கும் பறவைகளில் வேகமானது எது? கோல்டன் குளோவரா (ஆட்காட்டிக் குருவி) அல்லது கிரௌஸா (சதுப்பு நிலக்கோழி) என்கிற விவாதம் எழுந்தது. இவையிரண்டில் எது வேகமானது என்பதற்கு ஆதாரங்களோ புத்தகக் குறிப்புகளோ எதுவும் இல்லாமல் போனதால் அந்த விவாதத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனைப் போன்று ஹியூக்கிற்கு வரிசையாக பல சந்தேகங்கள் தோன்ற இது தொடர்பாக புத்தகம் ஒன்றை வெளியிட்டால் நன்கு விற்பனையாகி புகழ் பெறுமே என்று நினைத்து கிறிஸ்டோபர் என்ற தன் நிறுவனத்தில் வேலை செய்பவரின் உதவியுடன் நிகழ்வுகளைக் கண்டுபிடித்து எழுதும் நிறுவனத்தை நடத்திவந்த லண்டனைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களான நோரிஸ் மற்றும் ரோஸ் மெக்வ்ரிட்டர் இருவரையும் சந்தித்தார்.

4000
தற்போதைய சூழலில் ஒவ்வோர் ஆண்டும் பதிவு செய்யப்படும் சாதனைகளின் எண்ணிக்கை.

அவர்களிடம் தன்னுடைய விருப்பத்தைப் பற்றிச் சொன்னார். அவர்கள் சம்மதம் தெரிவித்து லண்டன் மாநகரில் 2 அறைகள் உள்ள இடத்தில் அலுவலகம் அமைத்து தகவல் திரட்டத் தொடங்கினார்கள். 1954ஆம் ஆண்டு இந்தப் பணி தொடங்கியது. மொத்தமாக 13 வாரம் 3 நாட்கள் தகவல் திரட்டப்பட்டு, 1955ஆம் ஆண்டு முதன்முதலில் பல்வேறு சாதனைகளைக் கொண்ட 198 பக்கங்கள் அடங்கிய கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகம் ஆங்கிலத்தில் வெளியானது. 1955இல் இருந்து 2000 வரை அது "கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" என்ற பெயரிலேயே வெளியானது. 2000க்குப் பின்புதான் இது "கின்னஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்" எனப் பெயர் மாற்றம் அடைந்தது.

இவை சாதனைகள் அல்ல

தொடக்கத்தில் வித்தியாசமான எல்லாவற்றையும் சாதனையாகக் கருதிய நிறுவனத்தினர் பின்னாளில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தனர். அழகு தொடர்பான செயல்கள் சாதனைகளாகக் கருதப்பட மாட்டாது. உண்ணுதல், குடித்தல், மது அருந்துதல், விலங்குகளைக் கொல்லுதல், அடுத்தவர் உரிமையைச் சிதைத்தல் போன்றவையும் சாதனைகளாகக் கருதப்படமாட்டாது.

1955இல் தொடங்கி சிறப்பாக சென்று கொண்டிருந்த இந்தப் புத்தகப் பணியில் இடையில் மிகப்பெரும் சறுக்கல் ஏற்பட்டது. இரட்டையர்களில் ஒருவரான ரோஸ், அயர்லாந்து ராணுவத்தினரால் 1975ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். பின்பு நோரிஸ் மட்டும் தனியாகவே தகவல் திரட்டினார். 1995ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்ற பின்பு, அவரைத் தொடர்ந்து இப்பணியை இன்று பலர்  செய்து வருகின்றனர். இலண்டனில் தலைமையகம் கொண்டு செயல்பட்டுவரும் "கின்னஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்" நிறுவனம் 1955இல் தொடங்கி இந்தாண்டு நவம்பர் 9 அன்று 64ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இன்றுவரை உலகம் முழுவதும் 100 நாடுகளில் 37 மொழிகளில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

நவம்பர் 9

உலகம் முழுவதும் அதிகம் விற்பனையான புத்தகம் என்ற சாதனையை கின்னஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் 2004 நிகழ்த்தியதையொட்டி உலக கின்னஸ் புத்தக நாளாக நவம்பர் 9 அறிவிக்கப்பட்டது.

ஆரம்ப காலகட்டங்களில் புத்தகத்தை தொகுத்தவர்கள் சாதனைகளைத் தேடிப்போய் கேட்டு பதிவு செய்தனர். இப்போது சாதனை செய்ய விரும்புவோர் கின்னஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். கின்னஸ் நிறுவன நடுவர்கள் முன்னிலையில் சாதனையை நிகழ்த்திக் காட்ட வேண்டும். அது சாதனையா? புத்தகத்தில் பதிவு செய்யலாமா வேண்டாமா? என்பதனை அந்த நிறுவனமே முடிவு செய்யும். ஏற்கனவே நிகழ்த்திய சாதனையை முறியடித்து புது சாதனை நிகழ்த்தலாம் அல்லது புதுமையான துறையில் சாதனையையும் நிகழ்த்தலாம்.

மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மட்டுமல்லாது இயற்கையின் உருவாக்கத்தில் விந்தையாக இருக்கக்கூடியவையும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும். இயற்கை அருவிகள், பெரிய பூசணிக்காய், பெரிய தக்காளி போன்ற வித்தியாசமான பல சாதனைகள் இப்புத்தகத்தில் இடம் பெறுகின்றன. தொடக்கத்தில் புத்தகமாக மட்டுமே இருந்த கின்னஸ் இன்று Record breakers என்கிற பெயரில் உலகின் பல நாடுகளில் பல மொழிகளில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவருகிறது.

ஒவ்வோராண்டும் பல்வேறு நாடுகளிலிருந்து பலர் பல்வேறு விதமான சாதனைகளைப் புரிகின்றனர். அதிக எடையுள்ள டர்பன் அணிந்திருக்கின்ற 60 வயது அவ்தார்சிங் மௌனி, மிகவும் குள்ளமான 23 வயது பெண் ஜோதி அமிஜ், நீளமான மீசை கொண்ட 58 வயது ராம்சிங் சௌகான், அதிக செலவுடைய திருமணம், மிகப்பெரிய சப்பாத்தி என அதிக சாதனைகள் செய்து கின்னஸ் சாதனைப் பட்டியலில் இந்தியாவும் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது.

இதுபோன்ற பல சாதனைகள் ஒட்டுமொத்த சமூகத்திற்கு பெரிய அளவிலான பலன் கொடுக்கவில்லையென்றாலும்கூட தனிமனிதன் தன்னுடைய திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் புதுமைகள் பல செய்வதற்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கின்றன. அதற்காகவே இந்த சாதனைகளையெல்லாம் முறையாக பதிவுசெய்து வருகிற "கின்னஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்" வரலாற்றில் என்றும் அழியாத தனித்த இடத்தைப் பெறும்.

Share